tgoop.com/tvp_time_pass_only/20979
Last Update:
பிறகு, விளம்பரம் செய்வது, உலகமெங்கும் விநியோகிப்பதெல்லாம் அவர்களின் பொறுப்பு. கிடைக்கும் லாபத்தில் இருவருக்கும் பாதி - பாதி. இங்கே தான், அந்த நிறுவனத்துக்குக் கொஞ்சம் மனக் கசப்பு. சார்லி சாப்ளின் வேண்டுமென்றே மெதுவாகப் படம் எடுக்கிறார், இரண்டு ரீல் படத்துக்கு யானை விலை, குதிரை விலை சொல்கிறார் என்றெல்லாம் அவர்கள் சண்டைபோடத் தொடங்கினார்கள். இந்த விஷயத்தில் சார்லி சாப்ளின் எந்த சமரசத்துக்கும் தயாராய் இல்லை. 'காசைக் கண்ணிலேயே காட்ட மாட்டேன் என்று கருமித்தனம் செய்தால், வெறும் வைக்கோல் தான் வாங்க முடியும். என்னுடைய படங்கள் ஒவ்வொன்றும் சொக்கத் தங்கம், அவற்றை மெருகேற்றி, எல்லோரும் பார்க்கும்படி செய்வதற்கு, ரொம்ப நேரமாகும், ரொம்ப செலவாகும், அந்தத் தரத்தை அனுபவிக்க வேண்டுமானால், நீங்கள் அதிகக் காசு செலவழிக்க தான் வேண்டும் !' இப்படி இருதரப்பினரும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால், நடுவே சிக்கிக் கொண்டு விட்ட சார்லி சாப்ளினின் படங்கள் என்ன ஆவது ?
நல்ல வேளையாக, சிட்னி சாப்ளினின் முயற்சியில், சார்லி சாப்ளினுக்கும், அவருடைய விநியோக நிறுவனத்துக்கும் இடையே மீண்டும் சுமுக உறவு ஏற்பட்டது. அவசரப்படாமல், தரமான, நல்ல படங்களை எடுத்து வெளியிடுவது தான் இருவருக்குமே நல்லது என்னும் சார்லி சாப்ளினின் கருத்தை, 'ஃபர்ஸ்ட் நேஷனல்' ஏற்றது. பின்னர், அவருடைய படங்கள் ஒவ்வொன்றாய் வெளிவரத் தொடங்கின. என்றாலும், இந்தச் சந்தோஷமும், தோழமையும் வெகு நாளுக்கு நீடிக்கவில்லை. அநேகமாய் சார்லி சாப்ளினின் ஒவ்வொரு படம் தயாராகும் போதும், அவருக்கும், 'ஃபர்ஸ்ட் நேஷனல்' நிறுவனத்தாருக்கும் இடையே குடுமிபிடிச் சண்டை தான் நடந்து கொண்டிருந்தது. இந்தக் களேபரங்களுக்கு இடையே, சாப்ளினுக்கு மிகுந்த நிறைவளித்த ஒரு விஷயம், அவருடைய படங்கள் ஒவ்வொன்றும், எதிர்பார்த்ததை விட அதிக நாள்கள் எடுத்துக் கொண்டு, கணக்கிட்டதைவிட அதிக டாலர்களை விழுங்கிய போதும், யாரும் குறைசொல்ல முடியாதபடி அருமையான தரத்தில் வெளிவந்து கொண்டிருந்தன.
அப்போது தான், இரண்டு முக்கியமான சம்பவங்கள் - ஒன்று, சார்லி சாப்ளினின் வீட்டு விவகாரம்.
இன்னொன்று, நாட்டு விவகாரம்.
இல்லை, உலக விவகாரம் !
சார்லி சாப்ளின் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய அதே காலகட்டத்தில் தான், முதலாவது உலகப் போரும் தொடங்கியது. என்றாலும், அந்தப் போரில் சாப்ளின் நேரடியாய்ப் பங்கு கொள்ளவில்லை. ஆனால், அமெரிக்கா முழுவதும், போர் நிவாரணச் சேவைகளுக்காக நிதி திரட்டும் பணி நடைபெற்ற போது, அதில் ஆர்வத்துடன் பங்கேற்று, அதற்கென பல பொதுக்கூட்டங்கள், பிற நிகழ்ச்சிகளை நடத்தித் தந்தார் சார்லி சாப்ளின். இதற்காக, அவர் நாடெங்கும் சுற்றுப் பயணங்கள் செல்ல வேண்டியிருந்தது. சென்ற இடமெல்லாம், அவரைப் பார்ப்பதற்காக மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்தார்கள். அந்தக் கூட்டங்களில் அமெரிக்கப் போர் நிதிப் பத்திரங்கள் ஏராளமாய் விற்றன. அவருடைய திரைப் பிரபல்யம், மக்களிடையே நிறைய நிதி சேர்க்க உதவியது. இது தவிர, 'The Bond' என்ற தலைப்பில், போர் நிதி சேகரிப்பு பற்றி ஒரு சிறிய விளம்பரப் படத்தையும் எடுத்துத் தந்தார் சார்லி சாப்ளின். அழுத்தமானதொரு செய்தியைச் சொன்ன அந்தப் படம் வெகுவாய்ப் பிரபலமடைந்தது. இதன்மூலம், சாப்ளினின் நிதி சேர்ப்பு முயற்சிகள் மாபெரும் வெற்றியடைந்தன. பின்னர், 'Shoulder Arms' என்ற தலைப்பில், சில போர் முனைக் காட்சிகளை நகைச்சுவையாய்ச் சித்தரித்து ஒரு படம் எடுத்தார் சாப்ளின். அந்தப் படமும் ரசிகர்கள், விமர்சகர்களின் பரவலான பாராட்டுகளைப் பெற்றது, பெரும் வெற்றியடைந்தது. ஒரு வழியாக, போர் ஓய்ந்து, குண்டுச் சப்தங்கள் தீர்ந்து, உலகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.
உலக நாடுகள் அனைத்தும், மறுபடி அமைதியை சுவாசிக்கத் தொடங்கியிருந்த அதே சமயத்தில், சார்லி சாப்ளினின் வீட்டில் ஒரு பெரிய சோகம். அதைப் பற்றி விரிவாகப் பார்க்குமுன், நாம் சில வருடங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். முதல் உலகப் போர் மும்முரமாய் நடைபெற்றுக் கொண்டிருந்த கால கட்டத்தில், சார்லி சாப்ளினின் சொந்த வாழ்க்கையில் ஒரு பெரிய விபத்து நடந்தது.
அவருடைய வாழ்க்கையின் முதல் கலகப் போர், அல்லது முதல் அக்கப்போர் !
என். சொக்கன்.
*பகிர்வு*
*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈*
BY Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil
Share with your friend now:
tgoop.com/tvp_time_pass_only/20979