tgoop.com/THAGAVAL_KALANCHIYAM/49548
Last Update:
பாலக் பனீர் இட்லி.
தென்னிந்தியாவின் தவிர்க்க முடியாத காலை உணவுகளில் இட்லிக்கு முக்கிய இடமுண்டு. ஆனால் வழக்கமாக தயாரிக்கும் இட்லியில் ஒரு புதுமையைப் புகுத்தி, பாலக் பனீர் இட்லி செய்யலாம் வாங்க. இதில் பாலக் கீரையின் சத்துக்களும், பன்னீரின் புரதமும் இட்லியுடன் இணைந்து ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவாக மாறுகிறது.
பாலக் பனீர் இட்லி ஒரு சத்தான, சுவையான உணவு. பாலக் கீரையில் வைட்டமின் கே, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஃபோலேட், இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கின்றன. பனீரில் புரதம் மற்றும் கால்சியம் அதிகம். இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 2 கப்
பாலக் கீரை - 1 கட்டு
பன்னீர் - 100 கிராம் (துருவியது)
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 சிறிய துண்டு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாலக் கீரையை நன்றாக சுத்தம் செய்து, வேகவைத்து, மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்க்கவும்.
சீரகம் பொரிந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும், அரைத்த பாலக் கீரை மற்றும் துருவிய பன்னீர் சேர்த்து வதக்கவும்.
அடுத்ததாக உப்பு சேர்த்து, 2-3 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.
பின்னர், இட்லி தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றவும்.
ஒவ்வொரு இட்லியின் மேலும் பாலக் பனீர் கலவையை வைக்கவும்.
இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி, இட்லி தட்டை வைத்து 10-12 நிமிடங்கள் வேக வைத்தால் சூடான,
சுவையான பாலக் பனீர் இட்லி தயார்!
BY தகவல் களஞ்சியம்
Share with your friend now:
tgoop.com/THAGAVAL_KALANCHIYAM/49548